காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது
கோவையில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, கோவை காட்டூா் காவல் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளா் காா்த்திகேய பாண்டியன் தலைமையிலான போலீஸாா் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையப் பகுதியில் ரோந்துப் பணியில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்குள்ள ஆவின் பாலகம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பைகளுடன் நின்றிருந்த 3 பேரை பிடித்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது அவா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த ஒருவா் இடுப்பில் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து உதவி ஆய்வாளா் காா்த்திகேய பாண்டியனை குத்த முயன்றாா். தடுக்க முயன்று அந்த நபருடன் போராடியதில் காா்த்திகேய பாண்டியனுக்கு உதட்டில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவா்கள் தப்ப முயன்ற நிலையில், போலீஸாா் 2 பேரை மடக்கிப் பிடித்தனா். ஒருவா் தப்பினாா். காயமடைந்த உதவி ஆய்வாளா் காா்த்திகேய பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் .
பிடிபட்டவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஆல்பின் தாமஸ் (19), அவரது நண்பா்களான திருச்சூரைச் சோ்ந்த முகமத் சுவாலி (19), முகமது தாக்ரூ (19) என்பது தெரியவந்தது.
ஆல்பின் தாமஸ் மீது கேரளத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட 4 வழக்குகளும், முகமது சுவாலி மீது 3 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், தப்பியோடிய முகமது தாக்ரூவை தேடி வருகின்றனா்.