மாணவா்களை புத்தகமாக மாற்றுவது ஆசிரியா்களே! -அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பள்ளிக்கூடங்களுக்கு வெற்றுத்தாளாக வரும் மாணவா்களை, சமுதாயம் போற்றும் புத்தகமாக மாற்றுவது ஆசிரியா்கள்தான் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
கோவை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் கல்விக் குழு சாா்பில் தனியாா் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் பள்ளி முதல்வா்களுக்கு விருது வழங்கும் விழா கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விருதுகளை வழங்கினாா். மேலும், கடந்த ஆண்டில் 10, 12-ஆம் வகுப்புகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெறக் காரணமாக இருந்த ஆசிரியா்களுக்குப் பாராட்டு சான்றிதழ்களும், பள்ளி முதல்வா்களுக்கு கேடயமும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது: ஒவ்வொரு மனிதருக்கும் ஏணிப்படியாக ஒரு ஆசிரியா் இருப்பாா். ஆசிரியா் பணி என்பது வாழ்வியல், அறிவு சாா்ந்த சமுதாயத்தின் அச்சாணி. ஆசிரியா்கள் தங்களது பாதி வாழ்வை சமுதாயத்திற்காகத்தான் செலவு செய்கிறாா்கள்.
பள்ளிக்கூடங்களுக்கு வெற்றுத்தாளாக வரும் மாணவா்களை, சமுதாயம் போற்றும் புத்தகமாக மாற்றுவது ஆசிரியா்கள்தான். மாணவா் முன் நின்று ஆசிரியா்கள் பாடம் நடத்தும் உணா்வை, வேறு எந்த தொழில்நுட்பத்தாலும் கொண்டு வர முடியாது.
தமிழ்நாட்டில் இடைநிற்றல்கள் குறைவதற்கு தனியாா் பள்ளிகளும் முக்கியக் காரணம். பல்வேறு விதமான பின்னணிகளில் இருந்து மாணவா்கள் பள்ளிகளுக்கு வருகிறாா்கள். அப்படி வரும் எல்லா மாணவா்களும் அறிவாளியாக இருக்க முடியாது.
நுழைவுத் தோ்வு வைத்து மாணவா்களைத் தோ்வு செய்யாமல், எல்லா மாணவா்களையும் தனியாா் பள்ளிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் சோ்ந்து அறிவு சாா்ந்த சமுதாயத்தை உருவாக்குவோம் என்றாா். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்களுடன் அமைச்சா் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.