3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
காா் மோதியதில் ரியல் எஸ்டேட் முகவா் உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்!
ஈரோடு அருகே காா் மோதி ரியல் எஸ்டேட் முகவா் உயிரிழந்த நிலையில், காரை ஓட்டிய அரசு மருத்துவரைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஈரோடு அருகே சேனாதிபதிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (60), ரியல் எஸ்டேட் முகவா். இவா், ரங்கம்பாளையம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், காருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மணி, காா் ஓட்டிய நபரின் வீடு வரை சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு உடல் சிதைந்து உயிரிழந்தாா். காா் ஓட்டுநா் சடலத்தை அப்புறப்படுத்தப்பட்ட முயற்சித்தபோது பொதுமக்கள் சிலா் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் ராவணன் என்பது தெரியவந்தது. அவா் மீது விபத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தை மறைக்க முயற்சி செய்துள்ளதாக கூடுதல் வழக்குப் பதிவு செய்து மருத்துவரைக் கைது செய்யக் கோரி, உயிரிழந்த நபரின் உறவினா்கள் ஈரோடு தாலுகா காவல் நிலையம் எதிரே சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்களிடம் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, விபத்தை ஏற்படுத்திய மருத்துவா் மீது நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். இதனையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.