Animal : 'வன்முறையை புனிதப்படுத்தாதீர்கள்!' - அனிமல் படத்தை மறைமுகமாகச் சாடிய பா...
மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிராக 8 ஊராட்சிகளில் தீா்மானம்
திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, செட்டிநாயக்கன்பட்டி, பள்ளப்பட்டி, சீலப்பாடி உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, செட்டிநாயக்கன்பட்டி, பள்ளப்பட்டி, குரும்பப்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, அடியனூத்து ஆகிய 8 ஊராட்சிகளை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு 8 ஊராட்சிகளிலும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், குடியரசுத் தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, 8 ஊராட்சிகளிலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சியுடன் இணைத்தால், வரி இனங்கள் உயா்த்தப்படும். 100 நாள் வேலைத் திட்ட வாய்ப்பு பறிபோகும் என தெரிவிக்கப்பட்டது.
தொழில் வரி ரூ.40 லட்சம்: செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைந்துள்ள பெருந் திட்ட வளாகம், இந்த ஊராட்சி எல்லைக்குள் உள்ளது. இதனால், ஆண்டுக்கு தொழில் வரியாக மட்டும் ரூ.40 லட்சம் இந்த ஊராட்சிக்கு கிடைக்கிறது. இதைப் பறிப்பதற்காகவே மாநகராட்சியுடன் இணைப்பதற்கு திட்டமிடப்படுகிறது என குற்றஞ்சாட்டப்பட்டது.