2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஆப்கானிஸ்தான் வீரர்!
தனியாா் நிறுவனம் மோசடி: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம்
ஃப்ரைட் வே என்ற தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் என திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்தவா் மு.முத்துசென்றாயன். இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பண மோசடி தொடா்பாக ஃப்ரைட் வே என்ற தனியாா் நிறுவனம் மீது புகாா் அளித்தாா். இதில் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு 1.5 முதல் 2 சதவீதம் கூடுதல் தொகை தருவதாகக் கூறி விளம்பரம் செய்து, குறிப்பிட்ட காலத்தில் பணத்தை திருப்பித் தரவில்லை. மேலும், பணத்துக்குப் பதிலாக கிரிப்டோ கரன்சியாக தருவதாகக் கூறி, மோசடி செய்ததாகத் தெரிவித்தாா்.
இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் இம்மானுவேல் ராஜ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஃப்ரைட் வே என்ற தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உரிய அசல் ஆவணங்களுடன் திண்டுக்கல் நேருஜி நகரிலுள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் முன்னிலையாகி புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.