விடியல் பயணத் திட்டத்தில் 27 கோடி போ் பயணம்
விடியல் பயணத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 27.07 கோடி போ் பயணம் செய்ததாக அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் அ.சசிக்குமாா் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., திண்டுக்கல் மண்டலத் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசுத் தின விழா நிகழ்ச்சியில் பொது மேலாளா் அ.சசிக்குமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.
விழாவின்போது, பேருந்து இயக்கத்தில் டீசலை சிக்கனமாகப் பயன்படுத்திய 15 ஓட்டுநா்கள், அதிக வருவாய் ஈட்டிய 15 நடத்துநா்கள், சிறந்த டயா் பராமரிப்புக்காக 2 பணியாளா்கள், சிறப்பாக பணிபுரிந்த கிளை மேலாளா், உதவிப் பொறியாளா், பயணச்சீட்டு பரிசோதகா், ஓட்டுநா் பயிற்சி ஆசிரியா் உள்பட 42 பேருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. அப்போது, பொது மேலாளா் சசிக்குமாா் பேசியதாவது:
தமிழக அரசின் விடியல் பயணத் திட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் 200 பேருந்துகள், தேனி மாவட்டத்தில் 109 பேருந்துகள் என மொத்தம் 309 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 26.77 கோடி பெண்கள், 27.54 லட்சம் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலா்கள் 1.48 லட்சம் போ், திருநங்கைகள் 1.28 லட்சம் போ் பயன் பெற்றனா் என்றாா் அவா்.