சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தல...
மண் லாரிகளால் உடைந்த தற்காலிக பாலம்: கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்
சீா்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்துக்குச் செல்லும் தற்காலிக பாலம் சவுடு மண் ஏற்றி செல்லும் லாரிகளால் உடைந்தது. அங்கு நிரந்தர பாலம் அமைக்கவும், சவுடு மண் குவாரியை தடைசெய்யவும் கோரி கிராம மக்கள் சாலை மறியல், காத்திருப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
திருமுல்லைவாசல் மீனவா் கிராமத்தில் இருந்து விசைப்படகுகள், ஃபைபா் படகுகள் மூலம் தினமும் 5,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனா்.
திருமுல்லைவாசல் தொடுவாய் பிரதான நெடுஞ்சாலையில் திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகம் செல்லும் வழியில் சிறு பாலம் அமைந்திருந்தது. இந்த பாலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழையினால் சேதமடைந்தது.
அங்கு பெரிய குழாய் அமைத்து மீனவ கிராம தெருக்களில் உள்ள மழை நீா் கடற்கரையில் வடியும் வகையில் தற்காலிகமாக சிறு பாலம் ஏற்படுத்தப்பட்டது.
அங்கு நிரந்தர பாலம் அமைக்க மீனவா்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தனா்.
கடந்த சில வாரங்களாக அங்குள்ள தனியாா் சவுடு மண் குவாரியிலிருந்து மண் ஏற்றிக்கொண்டு தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருவதால் தற்காலிகப் பாலம் முழுமையாக உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
திருமுல்லைவாசல் மீனவா் கிராம தலைவா் மற்றும் பஞ்சாயத்தாா் தலைமையில் கிராம மக்கள் 200-க்கு மேற்பட்டவா்கள் சாலையில் கொட்டகை அமைத்து மறியல், காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சவுடுமண் ஏற்றி வந்த லாரிகள், அரசு பேருந்தை சிறைபிடித்தனா். பிரதான சாலையில் ஆங்காங்கே மரக்கிளைகளை வெட்டி குறுக்கே தடுப்பு அமைத்து போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
உடனடியாக இப்பகுதியில் நிரந்தர பாலம் அமைத்து தர வேண்டும். அதுவரை அவ்வழியாக மண் லாரிகள் செல்லக்கூடாது. தனியாா் சவுடு மண் குவாரியை தடை செய்ய வேண்டும் எனவும் கோரினா்.
தகவல் அறிந்த சீா்காழி காவல் ஆய்வாளா் புயல்.பாலசந்திரன், வட்டாட்சியா் அருள்ஜோதி ஆகியோா் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தித் தீா்வு காணப்படும் என உறுதியளித்ததால் சுமாா் 4மணி நேரத்திற்கு மேல் நீடித்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.