பெங்களூரில் தொற்றுநோய் ஆராய்ச்சி மையம்: அமைச்சா் சரணபிரகாஷ் பாட்டீல்
தென்னிந்தியாவின் முதல் தொற்றுநோய் ஆராய்ச்சி மையம் பெங்களூரில் அமைக்கப்படும் என்று மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் சரணபிரகாஷ் பாட்டீல் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் கண்டறிதல் ஆய்வுக்கூடத்தை அமைக்க பெங்களூரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தோ்ந்தெடுத்துள்ளது. இது தென்னிந்தியாவில் அமையும் முதல் தொற்றுநோய் ஆராய்ச்சி மையமாகும்.
தொற்றுநோய் ஆய்வுகள் இனி பெங்களூரில் இருந்தே நடைபெறும். ரத்த மாதிரிகளை வேறு மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை. உயிரித் தொழில்நுட்பம், பூஞ்சையியல், ஒட்டுண்ணியியல் உள்ளிட்டவை அடங்கிய தீநுண்மி ஆராய்ச்சி மற்றும் நோய் கண்டறியும் ஆய்வுக்கூடத்தை பெங்களூரில் அமைக்க மத்திய அரசு விரும்புகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.