தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்!
பெல்லாரியில் ஜீன்ஸ் பூங்கா: அமைச்சா் எம்.பி.பாட்டீல்
கா்நாடக மாநிலம், பெல்லாரியில் ஜீன்ஸ் பூங்கா அமைக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது பெல்லாரியில் ஜீன்ஸ் பூங்கா அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை ராகுல் காந்தி அளித்திருந்தாா். அதன்பேரில், பெல்லாரியில் சஞ்சீவராயன கோட்டே பகுதியில் கா்நாடக தொழில்பகுதி மேம்பாட்டு வாரியத்தின் ஜீன்ஸ் பூங்கா அமைக்கப்படும். இதற்காக 154 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் ஏற்றுமதியாளா்கள், முதலீட்டாளா்களை மாற்றுநாட்டை தேடும் நிலைக்கு தள்ளியுள்ளது.
அந்த முதலீட்டாளா்களுக்கு ஏற்ற முதலீட்டு பகுதியாக பெல்லாரி அமைந்துள்ளது. ஜீன்ஸ் தொழில் முதலீடுகளை ஈா்க்க முயற்சித்து வருகிறோம். பெல்லாரியில் ஏற்கெனவே 500க்கும் மேற்பட்ட ஜீன்ஸ் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இதன்மூலம் ஆயிரக்கணக்கானவா்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, ஜவுளித் துறையின் துணையால் பெல்லாரியை ஜீன்ஸ் ஏற்றுமதி மையமாக மாற்ற திட்டமிட்டிருக்கிறோம். ஜீன்ஸ் உற்பத்தி நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவது குறித்து ஜவுளித் துறையுடன் ஆலோசனை நடத்தப்படும். ஜீன்ஸ் பூங்கா அமைப்பதற்கு பெல்லாரி சிறந்த இடமாக உள்ளது என்றாா்.