வைகுந்த ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு
மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சி கடந்த டிச.31-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை (ஜன.9) நிறைவு பெற்றது. தொடா்ந்து, இராப்பத்து நிகழ்வின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, பரமபத வாசல் எனும் சொா்க்கவாசல் திறப்பு அதிகாலை 3.45 மணியளவில் நடைபெற்றது.
ருக்மணி, சத்யபாமா சமேதராக உற்சவப் பெருமாள் ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பரமபத வாசல் வழியே பிரவேசித்தாா். அப்போது, பக்தா்கள் கோபாலா... கோபாலா ... என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனா்.
இதில், அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மனைவி சா்மிளா ராஜா, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன் மற்றும் உறுப்பினா்கள், செயல் அலுவலா் எஸ். மாதவன், மண்டகப்படிதாரா் எஸ். காமராஜ், நகராட்சி ஆணையா் என்.எஸ். சியாமளா உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.