MP: "ஹெல்மெட் ஏன் போடல?" - சாலையில் நடந்து சென்றவருக்கு அபராதம்; ம.பி-யில் அட்டக...
359 இணைய மோசடி வழக்குகளில் 23 பேர் கைது!
தெலங்கானாவில் 359 இணைய மோசடி வழக்குகளில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டதாக ஹைதராபாத் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் தொடர் இணைய மோசடியில் ஈடுபட்டு வந்த 60 வயது பெண் உள்பட 23 பேரை ஹைதராபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் மீது 359 இணைய மோசடி புகார்கள் இருப்பதாகவும் அதில், தெலங்கானாவில் மட்டும் 30 புகார்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் 5 காவல்துறையினர் குழுக்கள் நடத்திய தீவிர விசாரணையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் உள்ள காவல்துறையினருடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ததாகக் கூறிய சைபர் கிரைம் டிஜிபி தாரா கவிதா, 25 மொபைல் போன்கள், 45 சிம் கார்டுகள், 23 டெபிட் கார்டுகள், ரொக்கப் பணம், ஐந்து ஷெல் நிறுவன முத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார்.
இதையும் படிக்க | மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம்: ஆா்பிஐ
இதில், ஒரு வழக்கில் உ.பி.யைச் சேர்ந்த கமலேஷ் குமாரி (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மோசடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.1.90 கோடியை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினராக உள்ள குமாரி, சமீபத்தில் உ.பி.யில் நடந்த தேர்தலில் போட்டியிட்டார். தனது அரசு சாரா நிறுவனத்தின் வங்கிக் கணக்கை ரூ.35 லட்சம் சட்டவிரோத நிதி பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் இருந்து அவரை கைது செய்ய வாரண்டை போலீசார் கோரியபோது, 60 வயதான அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக 10 வழக்கறிஞர்கள் ஆஜரானதாக டிஜிபி தெரிவித்தார். பின்னர், ஹைதராபாத் போலீஸார் வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் கைது செய்ய அனுமதித்ததாக அவர் கூறினார்.
கடந்த டிசம்பர் 12, 2024 அன்று, 70 வயது நபர் ஒருவர் கமலேஷ் குமாரியின் மோசடியில் ரூ.1.90 கோடியை இழந்தார். பாதிக்கப்பட்ட நபர் வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் புகாரளித்த பிறகு அவர் இழந்த நிதி குற்றம் சாட்டப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் இருந்து முடக்கப்பட்டது. மேலும், அவருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைத் தேடி வருவதாக டிஜிபி தாரா கவிதா தெரிவித்தார்.
மற்றொரு சம்பவத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த சமீர் ஹுண்டேகர், தீபக் சம்பத் ஆகியோர் ரூ.2.95 கோடி வர்த்தக மோசடியில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டனர். போலியான பங்குச் சந்தை வர்த்தக திட்டங்களில் முதலீட்டாளர்களை குறிவைத்து மோசடி செய்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.