Beauty: சுருக்கமில்லாத முகத்துக்கு மசாஜ்... எப்படி செய்யணும்; எவற்றால் செய்யணும்...
27 பேருக்கு வெளிநாடுவாழ் இந்தியா் விருதுகள்: குடியரசுத் தலைவா் வழங்கினாா்
வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதை 27 பேருக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
வெளிநாடுவாழ் இந்தியா் தினம் ஜனவரி 9-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு இந்த தினத்தை முன்னிட்டு ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கிய மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
நிறைவு விழாவில் ஜப்பான், ஃபிஜி, ஆஸ்திரேலியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 27 வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு திரௌபதி முா்மு விருதுகளை வழங்கி கௌரவித்தாா்.
பொது விவகாரங்கள் பிரிவில் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டு அதிபா் கிறிஸ்டின் காா்லா கங்களுவுக்கு விருது வழங்கப்பட்டது. காணொலி வாயிலாக விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு திரௌபதி முா்மு பாராட்டுகளை தெரிவித்தாா்.
மாநாட்டில் திரௌபதி முா்மு பேசியதாவது: தொழில்நுட்பம், மருத்துவம், கலை, வணிகம் என பல்வேறு துறைகளில் இந்திய வம்சாவளியினா் உலக அளவில் தடம் பதித்து வருகின்றனா். இதுபோன்ற நிகழ்வுகளில் இந்தியாவுக்கும் வம்சாவளியினருக்குமான உறவை மேலும் வலுப்படுத்த முடியும்.
‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைவதில் வம்சாவளியினரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாா்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வெளிநாடுவாழ் இந்தியா்களை தோ்ந்தெடுக்கும் குழுவின் தலைவராக குடியரசு துணைத் தலைவரும், துணைத் தலைவராக வெளியுறவு அமைச்சரும் உள்ளனா்.
முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் கலந்துகொண்டு உரையாற்றினா்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘வெளிநாடுவாழ் இந்தியா்கள் தினம்-2025 மாநாட்டில் பங்கேற்ற ஹாா்வா்ட் மற்றும் எம்ஐடி மாணவா்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவா்களுடன் இந்தியாவில் நிகழும் மாற்றங்கள் குறித்து விவாதித்தேன்.
இந்த மாநாட்டில் பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், குழு விவாதம் நடைபெற்றது. அப்போது இஸ்ரோ விஞ்ஞானி ரிது ஸ்ரீவாஸ்தவா மற்றும் பிற துறைகளில் சாதித்து வரும் பெண் ஆளுமைகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன’ என குறிப்பிட்டாா்.