அதிரடியாக சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்..! பிபிஎல் தொடரில் புதிய சாதனை!
ஜானி வாக்கர் மதுபான விவகாரம்: கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ புது வழக்கு; பின்னணி என்ன?
சொந்த கட்சியோ, கூட்டணிக் கட்சியோ எதைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குகளை அடுத்தடுத்து பதிவு செய்து வருகிறது மத்திய அரசு.
வெளிநாட்டு மதுவான ஜானி வாக்கர் இறக்குமதிக்கான தடையை நீக்க உதவி செய்து லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டின.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்பு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 2018-ல் கார்த்தி சிதம்பரமும், ப.சிதம்பரமும் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்கள். அதைத்தொடர்ந்து சீனாவைச் சேர்ந்தவர்களுக்குச் சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்ட குற்றச்சாட்டிலும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த நிலையில் மேலும் ஒரு வழக்கை சி.பி.ஐ பதிவு செய்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டியாஜியோ (Diageo Scotland) குழுமம், ஜானி வாக்கர் மதுபானத்தை இந்தியாவில் வரி இல்லாமல் இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தது. கடந்த 2005 ஆம் ஆண்டில் வெளிநாட்டு மதுபானங்களை வரியில்லாமல் இறக்குமதி செய்யும் உரிமத்தை மொத்தமாக வைத்திருந்த இந்தியச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், டியாஜியோ குழுமத்தின் ஜானி வாக்கர் மது இறக்குமதிக்குத் தடை விதித்தது. இதனால் டியாஜியோவுக்கு இந்திய விற்பனை மூலம் கிடைக்கும் அதிகப்படியான வருமானம் நின்று போனது.
இதையடுத்து இந்தியச் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தடையை நீக்க உதவுமாறு கார்த்திக் சிதம்பரத்தை டியாஜியோ குழுமத்தினர் நாடியுள்ளார்கள். அதைச் செய்துகொடுத்து அதற்காக கார்த்தி சிதம்பரம் தன் நண்பர் பாஸ்கரராமனுடன் சேர்ந்து நடத்திய அட்வான்டேஜ் ஸ்ட்ரடீஜ்க் கன்சல்டிங் (Advantage Strategic Consulting) நிறுவனம் மூலம் 15 ஆயிரம் டாலரை ஆலோசனைக் கட்டணமாகப் பெற்றிருக்கிறார்கள் என்று சி.பி.ஐ, முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது. ஸ்டிராங்கான இந்த வழக்கு கார்த்தி சிதம்பரத்துக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கும் குடைச்சலைக் கொடுக்கும் என்கிறார்கள்.