ஆம் ஆத்மி கட்சியால் தில்லிக்குப் பேரழிவு: பாஜக தலைவர்!
தலைநகர் தில்லியில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மீதான தாக்குதல்களை பாஜக தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் ஷீஷ் மஹால், ஆம் ஆத்மி வெளியிட்ட தேர்தல் பாடம் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டு பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கேஜரிவாலை மீண்டும் இன்று தாக்கிப் பேசியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
மாற்றத்துக்காகவும், தில்லியைக் கவனித்துக் கொள்வதற்காகவும் ஆட்சிக்கு வந்தவர் தனது குணத்தையும் நடத்தையையும் மாற்றிக்கொண்டார்.
தில்லி மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள். அதேநேரத்தில் மக்கள் அவர்களை கேள்வி கேட்டால் கொந்தளித்துவிடுகிறார். ஆம் ஆத்மி வெளியிடப்பட்ட பாடல் கேஜரிவாலின் ஊழல் மற்றும் வரி செலுத்துவோரின் பணத்தில் தயாரான ஷீஷ் மஹால் கதையை விவரிக்கிறது.
முதல்வராக இருந்தபோது வரி செலுத்தும் மக்கள் பணத்தைத் தனிப்பட்ட வசதிக்காக தவறாகப் பயன்படுத்தினார் கேஜரிவால். ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஆடம்பர பொருள்கள் மற்றும் நவீன வசதிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் அரசுப் பணத்தைச் செலவு செய்தார் என்று அவர் கூறினார். இதை எதிர்த்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்திய வீடு மற்றும் விமானத்திற்கான செலவுகளை மேற்கோள் காட்டி பாஜகவுக்கு ஆம் ஆத்மி பதிலடி கொடுக்கிறது. ஆம் ஆத்மி கட்சியால் தில்லியில் பேரழிவுதான் நிகழும் என்று அவர் கூறினார்.
தில்லி பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குகள் பிப். 8-ம் தேதி எண்ணப்படுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என தில்லியில் முன்முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்படத்தக்கது.