Pregnant Job Service: "பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்" - பீகாரில் நூதன மோசடி; பின்னணி என்ன?
பீகாரில் சைபர் கிரிமினல்கள் நூதன மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பீகாரில் குழந்தை இல்லாத பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கூறி, ஒரு கும்பல் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது. பீகாரில் உள்ள நவாடா என்ற மாவட்டத்தில் இந்த மோசடி கும்பல் பிடிபட்டுள்ளது. அங்குள்ள கஹுரா என்ற கிராமத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பேஸ்புக்கில் அகில இந்திய பிரக்னண்ட் வேலை வாய்ப்பு என்ற பெயரில் விளம்பரம் செய்துள்ளனர். அந்த விளம்பரத்தைப் பார்த்து போன் செய்பவர்களிடம் இந்த வேலைக்குத் தங்களிடம் பதிவு செய்துகொள்ளுங்கள் என்று கூறி, ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் செல்பி எடுத்து அனுப்பி வைக்கும்படி கூறியிருக்கிறார்கள்.
அதோடு பதிவுக்கட்டணம் என்று கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கியிருக்கிறார்கள். தங்களது வலையில் சிக்கும் நபர்களிடம் குழந்தை இல்லாத பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், கர்ப்பமாக்கத் தவறினாலும் ரூ.50 ஆயிரத்திலிருந்து 5 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறியிருக்கின்றனர்.
இது குறித்து துணை ஆணையர் இம்ரான் பர்வேஸ் கூறுகையில், ''All India Pregnant Job Service மற்றும் பிளேபாய் சேவைகளை நடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கும்பல் தங்களிடம் சிக்குபவர்களிடம் ஹோட்டலில் அறை முன்பதிவு செய்யவேண்டும் என்பது போன்ற பல காரணங்களைச் சொல்லி பணம் வசூலித்து வந்தனர். அதோடு அவர்களை மிரட்டியும் பணம் சம்பாதித்தனர். இம்மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பிரின்ஸ் ராஜ், போலா குமார், ராகுல் குமார் ஆகியோரிடம் இருந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்களுடன் சாட்டிங் செய்தது, பணப் பரிவர்த்தனை போன்ற விபரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'' என்றார்.