Book Fair: அம்பேத்கர் பற்றி வெளியான புதிய புத்தகங்கள் என்னென்ன?
"தமிழக சுகாதாரத்துறையில் நிரந்தரப் பணியிடங்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்?" - பிசியோதெரபி சங்கம் கேள்வி
"அத்தியாவசிய துறைகளில் நிரந்தரப் பணியிடங்கள் எண்ணிக்கையை விட அதிகமான அளவில் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கப்படுவது பொது சுகாதரத்தின் தரத்தையும், பொது மக்களின் நலனையும் பாதிக்க வைக்கும்..." என்கிறார் இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் மருத்துவர் வெ. கிருஷ்ணகுமார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போதை அரசு பதவியேற்ற பிறகு மருத்துவத் துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர் நியமிக்கப்படமாட்டார்கள் எனச் சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்திருந்தார்.
ஆனால், அளித்த உறுதி, வார்த்தை அளவில் மட்டும் உள்ளதோ என நினைக்கும்படி புதிய காலிப் பணியிடங்களை அறிவிக்கும்போதே தற்காலிக தொகுப்பூதிய பணியிடங்களாக அறிவிப்பது நீடிக்கிறது.
மருத்துவப் பணியிடங்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்தது. அரசாங்கத்தால் வழங்கப்படக்கூடிய குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள் (Minimum Assured Service) பட்டியலில் பிசியோதெரபி துறை இடம்பெற்று உள்ளது. இது போன்ற அத்தியாவசிய துறைகளில் நிரந்தரப் பணியிடங்கள் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கப்படுவது பொது சுகாதரத்தின் தரத்தையும், பொது மக்களின் நலனையும் பாதிக்க வைக்கும் அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தும். அரசு மருத்துவ சேவைகளின் தரம் குறைக்கப்பட்டால் பொதுச் சுகாதார வசதிகளைப் பயன்படுத்தாமல் தனியார் வசதிகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்படுவார்கள். இது சாமானிய மகக்ளைப் பாதிக்கும், அரசின் பொது நல அக்கறையைக் கேள்விக்குள்ளாக்கும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 16-ன் அடிப்படையில், பிசியோதெரபிஸ்ட்களுக்குப் பொதுச் சுகாதாரத் திட்டங்களில் சம வாய்ப்புகள் வழங்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். உடற்பயிற்சிகள், மறுவாழ்வு மருத்துவ சேவைகள், சுகாதாரம் பேணுவதில் மிக முக்கியம் அங்கம் வகிக்க தொடங்கிய பிறகும் பிசியோதெரபிஸ்ட்கள் நியமனத்தில் போதிய அக்கறையை தமிழக அரசு காட்டவில்லை.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்ட புதிய பிசியோதெரபிஸ்ட்கள் பணியிடங்கள் அவுட்சோர்சிங் அடிப்படையில் அமர்த்த சுகாதாரத் துறை செயலாளர் அரசாணை (G. O. MS No 411,dated 19.12.2024) வெளியிட்டுள்ளார்.
அவுட்சோர்சிங் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது கோவிட் போன்ற அவசரகாலத் தேவைகளை நிர்வகிக்கத் தேவையான ஒரு தற்காலிக வழிமுறையாகும். ஆனால், இந்த வழிமுறையை அனைத்து காலங்களிலும், அனைத்து சூழல்களுக்கும் பொதுவானது எனக் கருதி பயன்படுத்த முற்படுவது திறம்பட்ட நிர்வாகத் தத்துவமாக இருக்கும் என்று கூற முடியாது. இது நீண்டகால அடிப்படையிலான வேலைவாய்ப்பு நிலைத்தன்மையையும், பணியாளர்களின் உரிமைகளையும் பாதிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. எனவே, இத்தகைய நியமன முறைகளைச் சிறப்பு தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தற்போது தமிழக அரசின் சுகாதாரத் துறை, பள்ளி கல்வித்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றின் கீழ் 247 நிரந்தரப் பணியிடங்களும், சுமார் 1531 தற்காலிக பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களும் உள்ளன. தற்காலிகமாக உருவாக்கப்படும் பணியிடங்கள் 10 சதவிகிதத்துக்கு மேல் தாண்டக்கூடாது. அதுவே சட்டத்திற்கும், நியாயமான தார்மீக உரிமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகக் கருதப்படலாம். உலக அளவில் மருத்துவப் பணியாளர் பணியிடங்கள் 80-90 சதவிகிதம் வரை நிரந்தரப் பணியிடங்களாகக் கடைபிடிக்கப்படுகின்றன.
காவலாளி, துப்பரவுப் பணியாளர், வாகன ஓட்டுநர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யத் தொடங்கி, இப்போது பிசியோதெரபிஸ்ட்கள் உட்பட அனைத்து பிரதான மருத்துவத் துறை பணியிடங்களும் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யும் அறிவிப்புகள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன.
சிஏஜி தணிக்கை குழு தரவுகள் தற்காலிகப் பணியிடங்களுக்கான நிர்வாகச் செலவு அதிகமாகவே உள்ளது என்று சுட்டிக் காட்டி வருகிறது. நிரந்தரப் பணியிடங்கள் என்பது ஒரே நேரத்தில் சிக்கனமானதும், நீண்ட காலத்திற்குப் பயனளிக்ககூடிய தீர்வாகும். தற்காலிகப் பணியிடங்களை உருவாக்குவதை விதிமுறையாக, வழக்கங்களாக அரசு கடைபிடிக்ககூடாது எனச் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
அதனால், தமிழக அரசு உடனடியாக காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் சிறப்பு சிகிச்சை மையத்திற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணை அறிவிப்பில் உள்ள பொது மருத்துவர்கள், செவிலியர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் உட்பட 507 புதிய பணியிடங்களில் உள்ள 16 சதவிகித நிரந்தர மருத்துவ பணியிடங்களை தவிர்த்து,
தொகுப்பூதிய அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ள மற்ற பிசியோதெரபிஸ்ட்கள் உட்பட பிரதான மருத்துவ துறை பணியிடங்களை உடனடியாக ரத்து செய்து, அவற்றை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அறிவிக்க வேண்டும் என இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்க தமிழ்நாடு கிளை ( TNIAP) சார்பில் கேட்டு கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.