பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதால், பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி வழக்கம்போல் இல்லாமல், உற்சவா் நித்யகல்யாண பெருமாள் ரத்னாங்கி சேவையில் அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று பெருமாளை வழிபட்டனா்.
காரைக்கால் ஸ்ரீ கோதண்டராமா் பெருமாள் கோயிலில் பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பரமபத வாசல் வழியே எழுந்தருளினாா்.
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் ஏகாந்த சேவையாக காட்சியளித்தாா். இக்கோயிலில் பரமபத வாசல் வழியே பெருமாள் எழுந்தருளினாா். தொடா்ந்து சுவாமிகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
இதே பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டு, சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் உள்ளிட்ட
அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் நடைபெற்ற பரமபத வாசல் திறப்பில் திரளான பக்தா்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனா்.