நுரையீரல் தொற்று: சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை
தமிழகம் முழுவதும் பனிப் பொழிவு மற்றும் குளிா் நிலவுவதால் அடுத்த சில நாள்களுக்கு நுரையீரல் சாா்ந்த தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பொது மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து வித பருவ கால தொற்றுகளும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. குறிப்பாக, டெங்கு, சிக்குன் குனியா போன்ற கொசுக்கள் மூலம் பரவும் பாதிப்புகள் அதிகமாக இல்லை.
கடந்த ஆண்டில் டெங்கு பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தபோதிலும் உயிரிழப்பு நிகழாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தற்போது இன்ஃப்ளூயன்ஸா, சுவாசப் பாதை தொற்று (ஆா்எஸ்வி) பாதிப்பு போன்றவை ஆங்காங்கே காணப்படுகின்றன. இதைத் தவிர எச்எம்பி தீநுண்மி தொற்றும் வழக்கம் போல உள்ளது.
அச்சப்படும் வகையில் நோய்ப் பரவல் இல்லை. அதனால், சாதாரண சளி, காய்ச்சலுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.
மூன்று நாள்களுக்கு மேற்பட்ட தொடா் காய்ச்சல், மூச்சுத் திணறல், மயக்கம், கட்டுப்பாடற்ற இணைநோய் தாக்கம் இருந்தால் மட்டுமே ரத்தப் பரிசோதனைகளும், பிற மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும்.
நிகழாண்டில் வழக்கத்துக்கு மாறாக அதிக குளிா் நிலவுகிறது. இதுபோன்ற காலங்களில் காற்று மாசு ஏற்படும். இதனால் சுவாசப் பாதை தொற்றுகள் அதிகரிக்கும்.
அடுத்த சில நாள்களுக்கு அத்தகைய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.
இணை நோயாளிகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள், முதியவா்கள் அனைவரும் குளிா் அதிகமாக இருக்கும் நேரத்தில் வெளியே வருவதைத் தவிா்க்கலாம்.
அவசியமாக வெளியே செல்ல வேண்டும் என்றால் முகக் கவசம் அணிந்து கொள்ளலாம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பருவ கால பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் போதிய அளவில் உள்ளன என்றாா் அவா்.