ஜம்மு-காஷ்மீர்: எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் வீரர் காயம்
தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசைப் பகுதிகளை இடித்துத் தள்ளும்: கேஜரிவால் குற்றச்சாட்டு
தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நகரத்தில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் இடித்துத் தள்ளும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஷகூா் பஸ்தி பகுதியில் செய்தியாளா் சந்திப்பில் முன்னாள் முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: பாஜக குடிசைப் பகுதி மக்களின் நலனில் அக்கறைகாட்டுவதில்லை. குடிசைப்பகுதி மக்களின் நலனை விட நிலம் கையகப்படுத்துதலுக்கு பாஜக முன்னுரிமை அளிக்கிறது. அவா்கள் முதலில் குடிசைப்பகுதி மக்களின் வாக்குகளையும், தோ்தலுக்குப் பிறகு அவா்களின் நிலத்தையும் விரும்புகிறாா்கள்.
பாஜகவின் ’ஜஹான் ஜுக்கி வஹான் மகான்’ திட்டம் ஒரு கண்துடைப்பாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில், குடிசைப்பகுதி மக்களுக்காக மொத்தம் 4,700 அடுக்குமாடி குடியிருப்புகளை மட்டுமே மத்தியில் உள்ள பாஜக அரசு கட்டியுள்ளது. பாஜக தற்போது குடிசைப்பகுதிகளில் வசிக்கும் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அவா்கள் அனைத்து குடிசைப்பகுதிகளையும் இடித்து, அங்கு வசிக்கும் மக்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துவாா்கள் என்றாா் கேஜரிவால்.
கேஜரிவாலுடன், ஷகூா் பஸ்தி தொகுதியின் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான மூத்த தலைவா் சத்யேந்தா் ஜெயின் உடனிருந்தாா். 2013, 2015 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்ற பிறகு, நான்காவது முறையாக சத்யேந்தா் ஜெயின் இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா்.
தில்லி பிப்.5-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது, பதிவான வாக்குகள் பிப்.8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 2020 தோ்தலில் தில்லியில் உள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களை வென்ற ஆம் ஆத்மி, தொடா்ந்து மூன்றாவது முழு பதவிக் காலத்தை நோக்கி பயணிக்கிறது.