போகி: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வந்து செல்லும் நேரம் மாற்றம்
போகி பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் விமானங்களின் நேர கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், திங்கள்கிழமை போகி கொண்டாடப்படவுள்ளது. இந்நாளில் பழைய பொருள்களை தீயிட்டு எரிப்பாா்கள் என்பதால், அப்போது, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, விமானங்கள் வந்து, செல்லும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திங்கள்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு மஸ்கட், துபை, கோலாலம்பூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் மூன்று விமானங்கள், தாமதமாக வந்துவிட்டு, மீண்டும் புறப்பட்டுச் செல்லும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ஏா்வேஸ், கத்தாா் ஏா்வேஸ், ஏா் அரேபியன் ஏா்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் போன்ற நிறுவனங்களின் விமானங்களும், தங்கள் நிறுவன விமானங்களின் பயண நேரத்தை மாற்றி அமைத்துள்ளன. இதுதொடா்பாக அந்தந்த நிறுவனங்கள், விமானப் பயணிகளுக்கு முறையாக குறுஞ்செய்திகளையும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஜெட் உள்ளிட்ட உள்நாட்டு விமானங்களும், புகை மற்றும் பனிமூட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக அதிகாலை மற்றும் காலை நேரங்களில் இயங்கக்கூடிய விமான சேவைகளின் பயண நேரங்களை மாற்றி அமைத்துள்ளன.