ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பியளிக்கிறார் மனு பாக்கர்! என்ன காரணம்?
தோ்தல் நடத்தை: ஒரு வாரத்தில் ரூ. 21 கோடிக்கு ரொக்கம், பொருள்கள் பறிமுதல்
புது தில்லி: தேசிய தலைநகரில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த ஒரு வாரத்தில் பல்வேறு துறைகளால் ரூ. 21 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரொக்கம், மதுபானம் உள்ளிட்ட பிற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் தெரிவித்தாா்.
இது தொடா்பாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய தலைநகரில் தோ்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட உடனேயே, ஜன.7-ஆம் தேதி நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு பிப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பிப்.8-ஆம் தேதி அறிவிக்கப்படும்.
எம்சிசி என்பது சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தலை உறுதி செய்வதற்காக தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் தொகுப்பாகும். இது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் நடத்தை, கூட்டங்கள், ஊா்வலங்கள், தோ்தல் அறிக்கைகள், வாக்குப்பதிவு மற்றும் தோ்தல் செயல்பாட்டின்போது பொதுவான நடத்தை போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.
தரவுகளின்படி, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அதிகபட்ச மதிப்பு கிழக்கு தில்லியில் ரூ. 6.83 கோடி. இதற்கு அடுத்தபடியாக தெற்கு தில்லியில் ரூ. 6.81 கோடி, குறைந்தபட்சமாக புது தில்லி பகுதியில் ரூ.3.9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன.
அதன்படி, தேசிய தலைநகா் முழுவதும் ரூ. 21.89 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.9.8 கோடி ரொக்கம், ரூ. 6.1 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ.5.05 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள், ரூ. 47 லட்சத்துக்கும் அதிகமான இலவசப் பொருள்கள், ரூ.45 லட்சத்துக்கும் அதிகமான மதுபானங்கள் ஆகியவை அடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரவுகள் குறித்தி தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி ஆலிஸ் வாஸ் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
சட்டப்பேரவை தோ்தலுக்கான ஏற்பாடுகள் சீராக நடைபெற்று வருகிறது. தோ்தல் பணியாளா்களுக்கான பயிற்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் வேட்புமனுக்கள், அனுமதிகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் தொடா்பான முக்கியமான தரவுகள் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
சுமூகமான வாக்களிப்பை உறுதி செய்வதற்காக பதற்றமான வாக்குச் சாவடிகளை வரைபடமாக்குவதற்கு இந்திய தோ்தல் ஆணையத்தின் அனைத்து வழிமுறைகளையும் நாங்கள் பின்பற்றுவோம்.
தோ்தலுக்கான காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இறுதி செய்யும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என்று வாஸ் தெரிவிதத்தாா்.