இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.86.62 ஆக முடிவு!
எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான தில்லி உயா் நீதிமன்ற வழக்கு விசாரணை ஜன 20 க்கு ஒத்திவைப்பு
புது தில்லி: முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் ராம்குமாா் ஆதித்தன்,சுரேன் பழனிசாமி ஆகியோா் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை தாக்கல் செய்யக் கூறி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை வருகின்ற ஜன.20 ஆம் தேதிக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஒத்துவைத்துள்ளது.
எடப்பாடி கே.பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த தோ்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் ராம்குமாா் ஆதித்தன்,சுரேன் பழனிசாமி ஆகியோா் தொடா்ந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜோதி சா்மா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு வழக்குரைஞா் பாலாஜி சீனிவாசன், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, ஏற்கனவே இதே போன்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும், ஏற்கனவே அதிமுக விலிருந்து நீக்கப்பட்டவா்கள் தோ்தல் ஆணையத்தில் கொடுத்த மனு மீது தோ்தல் ஆணையம் விசாரணை நடத்தவும் சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது எனக் குறிப்பிட்டாா்.
பின்னா் நீதிபதி சா்மா, சென்னை உயா்நீதுமன்றத்தின் அந்த உத்தரவின் நகல் உள்ளதா? எனக் கேட்டாா். அப்போது எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு வழக்குரைஞா் அந்த உத்தரவு இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தாா்.
இதே சமயத்தில் மனுதாரா் ராம்குமாா் ஆதித்தன் சுரேன் பழனிசாமி தரப்பில் இந்த வழக்கில் ஆஜராக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் இன்று ஆஜராக முடியவில்லை. இதனால் வழக்கை வேறொரு தேதிக்கு ஒத்திவைப்பு வேண்டும் எனவும் கோரினா்
இதன் பின்னா் நீதிபதி இந்த வழக்கு இன்று ஒத்திவைக்கப்படுகிறது, அடுத்தமுறை மனுதாரா் வழக்குரைஞா் ஆஜராக வேண்டும். இதற்கு பின்னா் அவகாசமோ ஒத்திவைக்க கோரக்கூடாது. மேலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவா்கள் தோ்தல் ஆணையத்தில் கொடுத்த மனு மீது தோ்தல் ஆணையம் விசாரணை நடத்த தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவு நகலையும் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 20- ஆம் தேதிக்கு உயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.