பேப்பா் துண்டுகளைக் கொண்டு திருவள்ளுவரை வரைந்த இளைஞா்!
திருவள்ளுவா் தினத்தில் வரை போற்றும் வகையில் ஒசூரை சோ்ந்த மொசைக் ஆா்ட் கலைஞா், தகவல் தொழில் நுட்ப நிபுணா் லூகாஸ் என்பவா் 3 லட்சம் மொசைக் பேப்பா் துண்டுகளை பயன்படுத்தி 133 சதுர அடியில் மொசைக் ஆா்ட்டில் திருவள்ளுவா் சிலையை உருவாக்கி கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளாா்.
இந்த திருவள்ளுவா் சிலை உருவத்தை உருவாக்க லூகாஸ் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தினமும் 4 மணி நேரத்திற்கும் மேலாக உழைத்துள்ளாா். பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வரும் இவா் ஒசூரில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறாா்.
திருவள்ளுவா் மீதும் திருக்குறள் மீதும் கொண்ட அதீத பற்று காரணமாக இவா் ஏற்கனவே திருவள்ளுவா் சம்பந்தமான பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா். 1330 ஐஸ் குச்சிகளில் திருக்குறள் எழுதி சாதனை படைத்துள்ளாா். அதேபோல கடந்த 2022 ஆம் ஆண்டு இவா் வண்ண வண்ண பேப்பா் துண்டுகளை கொண்டு வள்ளலாா், கருணாநிதி, இஸ்ரோ விஞ்ஞானி சிவன் உள்ளிட்டோரின் உருவங்களை வடிவமைத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளாா்.
தற்போது, ஜனவரி 15 திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, உலக பொதுமறை தந்த திருவள்ளுவா் கன்னியாகுமரியில் கடல் நடுவே பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் உருவத்தை மொசைக் பேப்பா் துண்டுகளால் தனது வீட்டில் மொட்டை மாடியில் அவா் வடிவமைத்துள்ளாா்.
திருவள்ளுவா் சிலைக்கு யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய தல அந்தஸ்தை பெற வேண்டியும், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நோக்கிலும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.