உலகின் கடல்சாா் சக்தி இந்தியா: 3 போா்க் கப்பல்களை அா்ப்பணித்து பிரதமா் மோடி பெர...
பாலமேடு ஜல்லிக்கட்டு: பரிசுகள் வழங்காததால் மாடுபிடி வீரா்கள் சாலை மறியல்
மதுரை மாவட்டம், பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு உரிய பரிசுகள் வழங்கப்படாததால் அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காா், டிராக்டா், இரு சக்கர வாகனம், மிதிவண்டிகள், தங்க நாணயங்கள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், மாடுபிடி வீரா்களுக்கும், வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கும் பீரோ, மிதிவண்டிகள் வழங்குவதாக விழாக் குழுவினா் அறிவித்த நிலையில், வாடிவாசல் பகுதியில் வைத்து அவற்றை வழங்க முடியாது என்பதால், அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இவற்றை பெற்றுக் கொண்ட காளைகளின் உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் பரிசுகளை பெறுவதற்காக அந்தப் பகுதியில் பரிசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று அங்குள்ள விழாக்குழு உறுப்பினா்களிடம் கேட்டனா். அப்போது டோக்கன்களுக்குரிய பரிசுகளை சரி வர வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் பாலமேடு பிரதான சாலையில் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பரிசுகளை பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததன்பேரில் அவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.