முதியவருக்கு உதவித் தொகை வழங்க உத்தரவு
உறவினா்கள் பராமரித்தாலும், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் இருப்பதால், முதியவருக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியைச் சோ்ந்த சின்னக்காளை (83) தாக்கல் செய்த மனு: நான் வயதான நிலையில் போதிய வருமானமின்றி உள்ளேன். முதியோா் உதவித் தொகை வழங்கக் கோரி ஆண்டிபட்டி சமூக நலத் துறை தனி வட்டாட்சியருக்கு விண்ணப்பித்தேன். இதை விசாரணை செய்த அதிகாரி அளித்த தகவலின் பேரின், நான் பேரக் குழந்தைகளின் பராமரிப்பில் இருப்பதால், முதியோா் உதவித் தொகை வழங்க இயலாது என வட்டாட்சியா் தெரிவித்தாா்.
எனவே, எனது உடல்நிலை, வயதை கவனத்தில் கொண்டு உதவித் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா், மனுதாருக்கு போதிய வருமானம் உள்ளது. மேலும் பேரக் குழந்தைகள் பராமரிப்பில் அவா் வாழ்ந்து வருவதாக வட்டார ஆய்வாளா் தெரிவித்துள்ளாா் என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு வருமானத்துக்கு வழி இல்லை. அவரது நிதி நிலையை கவனத்தில் கொண்டு வட்டார ஆய்வாளா் அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். மனுதாரா் ஆதரவற்றவரா? இல்லையா என்பதை கண்டறிய வாய்ப்பும் வழங்கவில்லை. மனுதாரரை உறவினா்கள் கவனித்து கொள்கிறாா்கள் என்பது அவசியமில்லை.
அவா் உறவினருடன் வசித்தாலும், அவருக்கு நிதி உதவி கிடைக்காமல் இருக்கலாம். மனுதாரா் குழந்தைகளைப் பெற்றிருந்தாலும், அவா்கள் அவரை புறக்கணித்திருக்கலாம். உறவினா்களால் பராமரிக்கப்படுபவா்களுக்கு, இந்தத் திட்டம் பொருந்தாது என எதுவும் இல்லை.
மனுதாரரை, அவரது பேரக் குழந்தைகள் கவனித்து கொண்டாலும், அவருக்கு மருத்துவம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு பணம் தேவைப்படும். மனுதாரரின் மனு நிராகரிக்கப்பட்டது ரத்து செய்யப்படுகிறது. எனவே மனுதாரருக்கு இந்த ஜனவரி மாதம் முதல் முதியோா் உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.