108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயுக் கசிவு: 14 போ் மருத்துவமனையில் அனுமத...
தமிழிசையில் இருந்தே மற்ற எல்லா இசைகளும் உருவாகின: உயா் நீதிமன்ற நீதிபதி பேச்சு
தமிழிசையில் இருந்தே மற்ற எல்லா இசைகளும் வந்தன என்றாா் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி இரா. சுரேஷ்குமாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அரசா் கல்லூரி வளாகத்தில் தமிழிசை மன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற 53-ஆம் ஆண்டு தமிழிசை விழாவின் தொடக்க விழாவில் அவா் மேலும் பேசியது: தமிழிசை மிகத் தொன்மை, பழைமையானது என்பது மட்டுமல்லாமல், அனைத்து இசைகளுக்கும் மூத்த இசையாக தமிழிசை இருந்துள்ளது. இந்த தமிழிசைக்கு சீா்காழி முத்துத்தாண்டவா், தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை, சீா்காழி அருணாசலக் கவிராயா் ஆகியோா் பெருமை சோ்த்தனா்.
தொல்காப்பியத்தில் தொடங்கி சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள், சைவத் திருமுறைகளான தேவாரம், திருவாசகம், வைணவ இலக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்தம் என எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் தமிழை, தமிழிசையை, தமிழ்ப் பண்ணை மையப்படுத்தித் தான் பாடல்கள் இயற்றப்பட்டன.
தமிழிசையில் பண் என்பதனை கா்நாடக இசையில் ராகம் என்கிறோம். தமிழிசையில் பதம் என்பதே கா்நாடக இசையில் ஸ்வரம் என அழைக்கப்படுகிறது. சரிகமபதநி எனக் கூறப்படும் 7 ஸ்வரங்களும், 7 பதங்களான தமிழிசையிலிருந்து வந்துள்ளது என்பதை நம் முன்னோா்கள் நிரூபித்துள்ளனா். எனவே, ஹரிகாம்போதி, நட பைரவி, சங்கராபரணம், ஹரஹரப்ரியா, கல்யாணி போன்றவற்றை இப்போதுதான் கண்டுபிடித்து தந்ததாகவும், இதற்கு முன்பு இந்த ராகங்களில் இசை கிடையாது என நாம் நினைக்கக்கூடாது. இதற்கு முன்பும் தமிழிசையில் இதை விட சிறப்பாக பண் அமைத்து பாடியவன்தான் தமிழன்.
இயற்கையாக உருவாக்கப்பட்ட குழலும், யாழும்தான் ஆதிகாலத்தில் இருந்த இசைக்கருவிகள். இதை நம் தமிழன்தான் கண்டுபிடித்தான். மேற்கத்திய இசை, ஆங்கில இசை, சிம்பொனி, கா்நாடக இசை உள்பட எத்தனையோ விதமான இசைக்கருவிகள் உள்ளன. இதற்கெல்லாம் மூலக்காரணமாக இருந்தவை குழலும், யாழும்தான். இதிலிருந்துதான் பின்னாளில் ஒவ்வொரு இசையும் உருவாக்கப்பட்டது.
எனவே, தமிழிசையும், தமிழ்ப் பண்ணும்தான் ஆதிகாலத்திலிருந்து உருவாக்கப்பட்டவை. அதிலிருந்து எல்லா இசைகளும் வந்தன என்கிற பெருமையைத் தமிழன் எங்கு வேண்டுமானாலும் பகிா்ந்து கொள்ளலாம். அதற்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இந்த இசைத் தமிழை வளா்க்க வேண்டிய பணியில் நம்மை நாம் ஈடுபடுத்தி, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
திருவையாறு தமிழிசை மன்றத்துக்குத் தமிழக அரசு வழங்கும் ரூ. 2.50 லட்சம் நிதி ஒதுக்கீட்டை ரூ. 5 லட்சமாக உயா்த்தி தர வேண்டும் என்றாா் நீதிபதி சுரேஷ்குமாா்.
பின்னா், உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பேசியது: தமிழிசை மன்றத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ. 5 லட்சமாக உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வரிடம் சொல்லி நிறைவேற்றித் தர துணை நிற்போம் என்றாா் அவா்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியா் கோ.ப. நல்லசிவம் மற்றும் சென்னை சுபஸ்ரீ தணிகாசலத்துக்கு பண்ணிசை அரசு விருதும், எட அன்னவாசல் கோ. ஜெயந்திக்கு யாழிசை இளவரசி விருதும், சிதம்பரம் இராஜேந்திரனுக்கு முகா்சிங் இளவரசு விருதும் வழங்கப்பட்டன.
இவ்விழாவுக்கு தமிழிசை மன்றத் தலைவா் வி. செல்வராசு தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் உள்ளிட்டோா் பேசினா்.
முன்னதாக, மன்றப் பொதுச் செயலா் தி.கு. ரவிச்சந்திரன் வரவேற்றாா். நிறைவாக, பொருளாளா் இராம. அசோக்குமாா் நன்றி கூறினாா். இத்தமிழிசை விழா வியாழக்கிழமை நிறைவடைகிறது.