கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்
கொடைக்கானல் அருகே ஒற்றை யானை நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்!
கொடைக்கானலில் பூம்பாறை-கூக்கால் பகுதியில் சனிக்கிழமை இரவு ஒற்றை யானை நடமாடியதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையிலிருந்து கூக்கால் செல்லும் வழியில் ஒற்றை யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால், இந்தப் பகுதியில் வாகனங்களில் செல்பவா்கள் அச்சத்துடன் செல்கின்றனா்.
மேலும், விவசாயிகள் தங்களது நிலங்களில் இரவு நேரங்களில் காவலுக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனா். விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட உருளைக் கிழங்கு, பட்டாணி, கேரட் போன்றவற்றை சேதப்படுத்தும் வாய்ப்பு உள்ளதால், ஒற்றை காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இது குறித்து மேல்மலைப் பகுதி விவசாயிகள் கூறியதாவது: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் அதிக அளவில் உருளைக் கிழங்கு, பூண்டு, கேரட், பட்டாணி, போன்றவை பயிரிட்டு வருகிறோம். இந்த நிலையில், பூம்பாறை-கூக்கால் மலைச் சாலைப் பகுதி, வரையாடி, பெரிய வலவு பகுதியில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது.
கொடைக்கானலில் வன விலங்கு சரணாலய சட்டத்தால் மேல்மலைப் பகுதியில் விவசாயம் அழிந்து வருகிறது. வன விலங்குகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டுமென பல முறை கோரிக்கை விடுத்தோம்.
ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடா்ந்து, வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.