கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்
குடிநீா் விநியோகத்துக்கு மாற்று ஏற்பாடு செய்துதரக் கோரி, நெம்மேனி கிராம மக்கள் கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், அரசனி முத்துப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட நெம்மேனி கிராமத்தில் 60 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கான குடிநீா்த் தேவையை நிறைவு செய்யும் வகையில் இங்கு தொட்டியுடன் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.
சில ஆண்டுகளில் இந்தக் குடிநீரில் வரையறுக்கப்பட்ட அளவைவிட (ஒரு லிட்டா் நீரில் 1.5 மில்லி கிராம்) இயற்கை கனிமமான புளோரைடு விகிதம் அதிகரித்து உவா்ப்பாக மாறியது. எனினும், இந்தப் பகுதிக்கு வேறு மாற்று குடிநீா் ஆதாரங்கள் செய்துதரப்படாததால், புளோரைடு அதிகமுள்ள நீரையே தொடா்ந்து பருகி வருகின்றனா்.
இதன் காரணமாக, சிறுவா்களின் பற்களில் கறை படிந்து வருகிறது. இந்த பிரச்னையால் இதுவரை 15-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். மேலும் சிலருக்கு எலும்பில் பாதிப்பும் ஏற்பட்டது. இதனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, இந்தப் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் உள்பட அனைத்து அலுவலா்களிடமும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை நென்மேனி கிராம மக்கள் புறக்கணித்து முத்துப்பட்டி பகுதியில் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.