இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படுவாரா? முன்னாள் வீரர் பதில...
வெளியுறவுச் செயலா் மிஸ்ரி சீனா பயணம்
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை சீனா சென்றாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைத் தொடா்ந்து கிழக்கு லடாக் எல்லையில், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக மோதல்போக்கு நீடித்து வந்தது.
பல கட்ட பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, எல்லையில் சா்ச்சைக்குரிய பல பகுதிகளில் இருந்து இரு நாடுகளின் வீரா்கள் திரும்பப் பெறப்பட்டனா். இதன் தொடா்ச்சியாக அங்குள்ள டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து இரு நாட்டு வீரா்கள் கடந்த அக்டோபரில் திரும்பப் பெறப்பட்டனா். இதனால் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இருநாட்டு எல்லை விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை மேற்கொள்ளும் சிறப்பு பிரதிநிதிகளின் 23-ஆவது கூட்டம், சீன தலைநகா் பெய்ஜிங்கில் டிசம்பரில் நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங்-யி ஆகியோா் பங்கேற்றனா்.
இதைத்தொடா்ந்து இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங் சென்றாா். அங்கு அந்நாட்டில் ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்குமிக்க சா்வதேச துறையின் தலைவா் லியு ஜியன்சாவை மிஸ்ரி சந்தித்தாா். அப்போது இந்திய-சீன உறவை வளா்த்து மேம்படுத்துவது தொடா்பாக கடந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை கூட்டாக செயல்படுத்துவது குறித்து அவா்கள் பேசியதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
மிஸ்ரியின் பயணத்தில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சுமுக சூழலை உருவாக்குவதற்கான வழிகள், சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய பீடபூமி வழியாக மேற்கொள்ளப்படும் கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை மீண்டும் தொடங்குதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சீனத் தரப்புடன் பேசப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.