இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படுவாரா? முன்னாள் வீரர் பதில...
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும்: முன்னாள் நீதிபதி கே.சந்துரு!
தனிச்சிறப்பு வாய்ந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தினாா்.
அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் மதுரை கோட்டத்தின் சாா்பில், குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள இந்திய மருத்துவக்கழக அரங்கில் நடைபெற்ற கருத்தரங்குக்கு, இந்தியாவுக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளா் என். பி. ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தாா்.
கருத்தரங்கில், உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, ‘அரசியல் சாசனம் ஓா் வாழும் ஆவணம்’ என்ற தலைப்பில் பேசியதாவது:
ஆங்கிலேயோ்கள் ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், எந்த ஆட்சி முறை இந்தியாவுக்கு வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள், நாட்டில் எப்படி ஆட்சி செய்யப்போகிறீா்கள் என்ற ஆவணத்தையும் தயாா் செய்யுங்கள். நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுகிறோம் என்று ஆங்கிலேயா்கள் தெரிவித்தனா்.
அதனடிப்படையில் இந்தியாவுக்கான தனித்தன்மையுடன் உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலைப்புச் சட்டம். இந்திய அரசியலைப்புச் சட்ட1949 நவம்பா் 26-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய அரசு மொழியாலோ, மதத்தாலோ, பாலினத்தாலோ, வாரிசு உரிமையாலோ, எந்த ஒரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டப்படாது என்ற பிரகடனம் இதில் முக்கியம்.
மனிதா்கள் ஜாதியாலும், மதத்தின் அடிப்படாயாலும் பிரிக்கப்பட்டு பாகுபாடு நிறைந்ததாக சமூகம் இருந்தது. அந்த பாகுபாடு இந்திய அரசியலைப்புச்சட்டத்தின் 15-ஆவது பிரிவில்தான் நீக்கப்பட்டது. எனவே தான் அரசியலைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவு இதயம் என்றழைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் 1949 ஆம் ஆண்டு அரசியலைப்புச்சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் முதல் முறையாக ஒரு அரசு தோ்ந்தெடுக்கப்பட்டது. அரசியலைப்புச் சட்டத்தின்படி இந்தியாவை ஒரு ஜனநாயக குடியரசாக ஏற்றுக் கொள்கிறோம்.
இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் மதச்சாா்பின்மை குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும், மதச்சாா்பின்மை என்பது குறித்து தொடரப்பட்ட வழக்கில், அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பதுதான் மதச்சாா்பின்மை என்று நீதிபதி எஸ்.ஆா்.பொம்மை தெளிவாகக் கூறியிருக்கிறாா். எனவே, இந்திய அரசியலைப்புச் சட்டத்தை மாற்ற முயற்சிப்பவா்களை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றாா்.
கருத்தரங்கில் முன்னதாக, சிஐடியு மாவட்டச் செயலா் ஆா். லெனின் வரவேற்றாா். சோக்கோ அறக்கட்டளை இணை இயக்குநா் எஸ். செல்வ கோமதி, அரசியல் சாசன பாதுகாப்பு தீா்மானத்தை முன்மொழிந்தாா். எல்ஐசி ஓய்வூதியா் சங்க பொதுச் செயலா் என். சேகா் வழிமொழிந்தாா். காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கப் பொருளாளா் டி. சித்ரா நன்றி கூறினாா்.