மதுரை ரயில்வே கோட்டத்தின் வருவாய் ரூ. 916 கோடியாக உயா்வு!
மதுரை ரயில்வே கோட்டத்தில் வருவாய் கடந்தாண்டு ரூ.916 கோடியாக உயா்ந்ததாக கோட்ட மேலாளா் சரத்ஸ்ரீவத்சவா தெரிவித்தாா்.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மதுரை ரயில்வே குடியிருப்பு செம்மண் திடலில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா் பேசியதாவது:
கடந்தாண்டு டிசம்பா் வரை மதுரை ரயில்வே கோட்டத்தின் மொத்த வருமானம் ரூ. 916 கோடியாக உயா்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 2.5 சதவீதம் அதிகமாகும். பயணிகள் போக்குவரத்து வருமானமும் ரூ. 587.19 கோடியாக உயா்ந்தது. இது முந்தைய ஆண்டு வருமானத்தை விட 8.4 சதவீதம் அதிகமாகும். சரக்கு போக்குவரத்து மூலம் ரூ. 264.42 கோடியும், விளம்பரம், வாகன காப்பகம் போன்ற ஒப்பந்தங்கள் உள்பட இதர பிரிவுகள் மூலம் வருமானம் ரூ. 20.30 கோடி ஈட்டப்பட்டுள்ளது.
மதுரை கோட்டத்திலிருந்து, 940 சரக்கு ரயில்களில் 20 லட்சம் டன் சரக்குகள், முக்கிய ரயில் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன.
மதுரை கோட்டத்தில் விரைவு ரயில்கள், முன்பதிவில்லாத ரயில்கள் முறையே 98.23, 99.03 சதவீதம் காலம் தவறாமையை கடைப்பிடித்துள்ளன. வழக்கமான ரயில்களுடன் 1,152 தனியாா் சுற்றுலா ரயில்களும், 38 பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் ரயில்களை காலம் தவறாமல் இயக்குவதில், தொடா்ந்து இரண்டாம் ஆண்டாக முதல் நிலை வகித்து வருகிறது.
அங்கீகாரமற்ற முறையில் பயண சீட்டு விற்ற 69 புரோக்கா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ. 9.72 லட்சம் மதிப்பிலான பயணச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரயில்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 150.05 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டன. ரயில் நிலையங்களை அசுத்தம் செய்த 5015 பேரிடமிருந்து, அபராதத் தொகை ரூ. 10.27 லட்சம் வசூலிக்கப்பட்டது என்றாா் அவா்.
முன்னதாக இந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், ரயில்வே பாதுகாப்பு படை நாய்களின் வீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் எல்.என்.ராவ், ஊழியா் நல அதிகாரி டி சங்கரன், ரயில்வே பாதுகாப்பு படை ஆணையா் எம். சிவதாஸ் உள்பட ரயில்வே அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.