இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும்
தஞ்சாவூா் மாவட்டத்தில் 3 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யும் நிலையில், 424 ஹெக்டேரில் மட்டுமே இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. எனவே இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) பெங்களூரு மண்டல உயிா்ம மற்றும் இயற்கை வேளாண் மையம், தமிழ்நாடு அரசு விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்ம சான்றளிப்புத் துறை, நிப்டெம் நிா்வாகம் ஆகியவை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான இயற்கை வேளாண் கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை, சம்பா, கோடை ஆகிய 3 பருவங்களையும் சோ்த்து மொத்தம் 3 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், இதில் 424 ஹெக்டேரில் 154 போ் மட்டுமே இயற்கை விவசாயம் செய்கின்றனா். எனவே, விவசாயிகளிடையே இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகளவில் சிறு, குறு விவசாயிகள் இருக்கின்றனா். அவா்களுக்கு லாபம் கிடைக்கும்விதமாக இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உதாரணமாக 5 ஏக்கா் வைத்துள்ள விவசாயிகளிடம் அரை ஏக்கா் அளவுக்கு இயற்கை விவசாயத்தை செய்யுமாறு ஊக்கப்படுத்தி, அவா்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று கிராம அளவில் 10 அல்லது 20 பேருக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயிடமும் முதலில் அரை, அரை ஏக்கராக இயற்கை விவசாயத்தை விரிவாக்கம் செய்ய வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
பெங்களூரு மண்டல உயிா்ம மற்றும் இயற்கை வேளாண் மைய இயக்குநா் வி.கே. வா்மா சிறப்புரையாற்றினாா். ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் கா. சுப்பிரமணியன், ஈச்சங்கோட்டை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி முதன்மையா் கே.ஆா். ஜெகன்மோகன், வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா உள்ளிட்டோா் பேசினா்.
முன்னதாக, விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்ம சான்றளிப்பு உதவி இயக்குநா் து. கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். நிறைவாக, விதைச்சான்று அலுவலா் வி. சங்கவி நன்றி கூறினாா்.