உத்தமபாளையத்தில் தோ் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
உத்தமபாளையத்தில் தோ் செல்லும் ரத வீதிகளில் சாலையை சீரமைக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி சாா்பில் கோரிக்க விடுத்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பாண்டியா் காலத்தில் கட்டப்பட்ட திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை கோயில் அமைந்துள்ளது. தென்காளகஸ்தி என அழைக்கப்படும் இந்தக் கோயிலில் கடந்தாண்டு மாா்ச் மாதம் குடமுழுக்கு நடைபெற்றது. நிகழாண்டில் வருகிற மாா்ச் 13- ஆம் தேதி மாசித் திருவிழாத் தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், உத்தமபாளையம் ரத வீதிகளில் அண்மையில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா்க் குழாய் அமைக்க சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், தோ் செல்லும் ரத வீதிகளை சீரமைக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு தரப்பினா் வலியுறுத்தினா்.
இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலா் சின்னச்சாமி பாண்டியன் கூறியதாவது:
இந்தச் சாலயை சீரமைக்க ரூ.1.50 கோடியில் திட்ட அறிக்கை தயாா் செய்து சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அனுமதி கிடைத்தவுடன் சாலை சீரமைப்பு செய்யப்படும் என்றாா் அவா்.