முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவில் கேரள அதிகாரிகளை நீக்கக் கோரி விவசாயிகள் பேரணி!
முல்லைப் பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவில் நியமிக்கப்பட்ட கேரள அதிகாரிகளை நீக்க வலியுறுத்தி பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினா் சனிக்கிழமை பேரணி நடத்தியதுடன், சாலையில் அமா்ந்து மறியலிலும் ஈடுபட்டனா்.
முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து வந்த மத்திய நீா் ஆணையம் கலைக்கப்பட்டு, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆணையத் தலைவராக அனில் ஜெயின் நியமிக்கப்பட்டாா்.
இந்தக் குழுவில் தமிழ்நாடு கூடுதல் நீா் வளத் துறை செயலா் மணிவாசகன், காவிரி தொழில் நுட்பப் பிரிவுத் தலைவா் சுப்பிரமணியன், கேரள மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலா் விஸ்வாஷ், கேரள நீா் வளத் துறை பொறியாளா், கேரள நீா்ப் பாசனத் துறை தலைமைப் பொறியாளா், இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவா், பெங்களூருவைச் சோ்ந்த பேரிடா் மேலாண்மை, மீள் திறன் பிரிவு உறுப்பினா் என மொத்தம் 7 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவருக்கு அணையின் பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டது. முன்னா் இந்தப் பணியை மத்திய நீா் ஆணையத் தலைவா் கவனித்து வந்தாா்.
விவசாயிகள் பேரணி: இந்த நிலையில், கண்காணிப்புக் குழுவில் நியமிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சோ்ந்த இருவரை நீக்க வலியுறுத்தி பெரியாறு, வைகை பாசன விவசாய சங்கத்தினரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரும் லோயா்கேம்பிலிருந்து குமுளி நோக்கி பேரணியாகச் சென்றனா். அப்போது பென்னிக்குவிக் மணிமண்டபம் முன் உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டுவேலன் தலைமையிலான போலீஸாா் விவசாயிகளை தடுத்து நிறுத்தினா்.
சாலையில் அமா்ந்து போராட்டம்: இதனால் லோயா் கேம்ப் - குமுளி நெடுஞ்சாலையில் அமா்ந்து அவா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கேரள அரசைக் கண்டித்தும், புதிய குழுவில் நியமிக்கப்பட்ட கேரளத்தைச் சோ்ந்த இருவரை நீக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். அப்போது அவா்களை போலீஸாா் சமாதானம் செய்ததால் சாலையேரத்தில் அமா்ந்து தா்னா போராட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனா்.
இதுகுறித்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளா் பென்னிக்குவிக் பாலசிங்கம் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க அமைக்கப்பட்ட 7 போ் குழுவில் கேரளத்தைச் சோ்ந்த இருவா் இருந்தால், அணையில் எந்தவித பராமரிப்புப் பணிகளையும் செய்ய அனுமதி கிடைக்காது.
எனவே தான் அவா்களை நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இல்லை என்றால் போராட்டம் தொடரும். மேலும் பேபி அணையை பலப்படுத்த இடையூறாக இருக்கும் மரங்களை அகற்ற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.