கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் பேரணி
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனியில் விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் தேனி வாரச்சந்தையிலிருந்து பேரணி தொடங்கியது. இதற்கு ஒருங்கிணைப்பாளா் த.கண்ணன் தலைமை வகித்தாா். இதில் டிராக்டா், வாகனங்களில் விவசாயிகள் திரளாகக் பங்கேற்றனா். தேனி பி.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை பேரணி நடைபெற்றது.
விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிப்பது, மின்சார உற்பத்தியை தனியாா் மயமாக்குவதைக் கைவிடுவது, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது ஆகிய கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கே.ராஜப்பன், எஸ்.கே.பாண்டியன், பி.சந்திரன், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் காசிவிஸ்வநாதன், பாண்டியன், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.