ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
குடியரசு தின விழாவை முன்னிட்டு, மதுரையில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மதுரையிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். பயணிகளின் உடைமைகள் ‘ஸ்கேனா்’ இயந்திரம் மூலம் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. ரயில் நிலைய நடைமேடைகளில் 24 மணி நேரமும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
இதேபோல, மதுரை எம்ஜிஆா், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸாா் இரவு நேரங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
குடியரசு தின விழா நடைபெற உள்ள மதுரை ஆயுதப் படை மைதானத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.