இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் விருச்சிகம் வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப...
ஜிஎஸ்டி அமலால் வரியில்லாத மாநில பட்ஜெட்தான் தாக்கலாகும்: அமைச்சா் தங்கம் தென்னரசு!
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு சென்றுவிட்டதால், தமிழகத்தில் வரி இல்லாத நிதிநிலை அறிக்கைதான் (பட்ஜெட்) தாக்கல் செய்ய முடியும் என மாநில நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
விருதுநகரில் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து ஒவ்வோா் மாதமும் 4-ஆவது சனிக்கிழமை அன்று, நெகிழிக் கழிவுகளை அகற்றி முறைப்படி அப்புறப்படுத்தும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தலைமையில் நிதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்.
முன்னதாக, நெகிழிக் கழிவுகளை அகற்றுவது, அதற்கு மாற்றாக துணிப் பைகளைப் பயன்படுத்துவது குறித்த உறுதிமொழியை அமைச்சா் வாசிக்க, அங்கிருந்த அனைவரும் ஏற்றுக் கொண்டனா். பிறகு, விருதுநகா் கெளசிகா நதிக் கரையோரம் நெகிழிக் குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளா்களுடன் இணைந்து அமைச்சா் ஈடுபட்டாா்.
இதைத் தொடா்ந்து, அமைச்சா் தங்கம் தென்னரசு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தூய்மையான தமிழகத்தை உருவாக்க சுற்றுச்சூழலை மேம்படுத்தி, ஆரோக்கியமாக வாழ ஒரு முறை பயன்படுத்தும் நெகிழியை முறைப்படி அகற்ற வேண்டும். நீா்நிலைகளையும் தூய்மைப்படுத்தி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாதமும் 4-ஆவது சனிக்கிழமை நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
இனி வருங்காலங்களிலும் திமுக அரசுதான் நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும். ஜி.எஸ்.டி. அமலான பிறகு வரி விதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு சென்றுவிட்டதால், தமிழகத்தில் வரி இல்லாத நிதிநிலை அறிக்கையைத்தான் தாக்கல் செய்ய முடியும் என்றாா் அவா்.