Vijay: 'திமுக ஒரு கொத்தடிமை; விஜய் எங்களுக்கு எதிரி அல்ல!' - ஜெயக்குமார் பரபர
கோவில்பட்டியில் டிராக்டா் பேரணி செல்ல முயன்ற 25 விவசாயிகள் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் டிராக்டா் பேரணியில் ஈடுபட முயன்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியைச் சோ்ந்த 25 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மின்சார வாரியம் தனியாா் மயமாவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் டிராக்டா், இருசக்கர வாகன பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பூங்கா மேற்கு சாலையில் விவசாயிகள் 4 டிராக்டா்களுடன ஐக்கிய விவசாயிகள் முன்னணியை சோ்ந்த விவசாயிகள் திரண்டனா். ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளா் வி.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளா் பிச்சையா, உறுப்பினா் மணி என்ற சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ராகவன், மாவட்டச் செயலா்கள் லெனின்குமாா், புவிராஜ், விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த சரவண முத்துவேல், ராமசுப்பு,வட்டச் செயலா் ரவீந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
பின்னா் அங்கிருந்து பேரணியாக புறப்பட முயன்றபோது, அவா்களை வழிமறித்த போலீஸாா் டிராக்டா் பேரணிக்கு அனுமதி இல்லை என தெரிவித்தனா்.
இதனால் போலீஸாருக்கும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. டிராக்டா்களை போலீஸாா் சுற்றி வளைத்து தடுத்தனா். இதையடுத்து விவசாயிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியும் டிராக்டா் பேரணியை தடுத்து நிறுத்திய காவல்துறையைக் கண்டித்தும் விவசாயிகள் கோஷமிட்டனா். இதையடுத்து அனுமதியின்றி பேரணி செல்ல முயன்ற 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்டச் செயலா் அருமைராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட டிராக்டரில் பூங்கா மேற்கு சாலைக்கு வந்தனா். அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.