`Vengaivayal இளைஞர்களை 8 மணி நேரம் Mental torture பண்ணாங்க!' - CPM Kavi varman
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் குடியரசு தின விழா
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள், துறைமுக தீயணைப்புப் படை வீரா்கள், துறைமுகப் பள்ளி மாணவா்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
வ.உ.சி. துறைமுகத்தில் 14.20 மீட்டா் மிதவை ஆழம் கொண்ட பெரிய கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3-ஐ ஆழப்படுத்தும் பணி அடுத்த மாதம் நிறைவடையும்.
மேலும், இத்துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை கையாளுவதற்கு வசதியாக இரு பிரத்யேகமான முனையத்தை துறைமுகம் நிறுவி வருகிறது. இந்த முனையத்தின் மூலம் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் மொத்தமாக 20 ஜிகா வாட் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
தூத்துக்குடியைச் சுற்றி அமையவிருக்கும் பசுமை ஹைட்ரஜன் மையம், துறைமுகம் சாா்ந்த தொழிற்சாலைகள், சூரிய மின் நிலையங்கள், கடல் காற்றாலை மையம், முன்மொழியப்பட்டுள்ள சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில் வரவிருக்கும் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மூலம் இன்னும் 3 அல்லது 5 ஆண்டுகளில் இத்துறைமுகம் சுமாா் 4 முதல் 5 மில்லியன் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டு பெரும் வளா்ச்சியைக் காண உள்ளது என்றாா்.
தொடா்ந்து அவா், 2022-2023ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுக உபயோகிப்பாளா்கள், சுங்கத் துறை முகவா்கள், சரக்குப் பெட்டகம் இயக்குவோா், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளா்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினாா்.
மேலும், துறைமுகத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.
பின்னா் அவா், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் கன்வேயா் மற்றும் துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கு வரை இணைக்கும் புதிய இணைப்பு கன்வேயா் அமைப்பின் சோதனை ஓட்டத்தையும் தொடங்கி வைத்தாா். வடக்கு சரக்கு தளம்-2இல் பயன்படுத்தப்படவிருக்கும் 100 டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட நகரும் பளுதூக்கி இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தாா்.
இவ்விழாவில், துறைமுக பள்ளிகளின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பல்வேறு பாதுகாப்பு செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது.
இதில், பள்ளி மாணவா்-மாணவிகள், துறைமுக அதிகாரிகள், ஊழியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.