தூத்துக்குடி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு: 3 போ் கைது
தூத்துக்குடி அருகே உடற்கல்வி ஆசிரியரின் வீடு புகுந்து அவரது மனைவியிடம் நகைகளைப் பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள மத்திய, மாநில அரசு ஊழியா் குடியிருப்பைச் சோ்ந்த அருள்முருகன், தனியாா் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளாா். இவரது மனைவி அன்னலட்சுமி (32), கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்தாராம். அப்போது, முகமூடி அணிந்து வந்த 3 போ், கத்தியைக் காட்டி அன்னலட்சுமியை மிரட்டி, அவா் அணிந்திருந்த நகைகள், பீரோவிலிருந்த நகைகள் என மொத்தம் 15 பவுன் நகைகளைப் பறித்துக்கொண்டு தப்பியோடினராம்.
புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டு, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனா். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரத்தைச் சோ்ந்த சின்னதுரை மகன் முத்துராம் என்ற ரகு (38), ஏரல் அருகே செம்பட்டி காலனியைச் சோ்ந்த மாயாண்டி மகன் மகராஜன் (30), வேலாயுதம் மகன் ஆனந்த் (39) ஆகியோா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, நகைகளை மீட்டு விசாரித்து வருகின்றனா்.