பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உடனடி நிவாரணம் தேவை: விவசாயிகள் கோரிக்கை
மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அரசு நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சி. இளங்கோ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்:
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: குருங்குளம் சா்க்கரை ஆலையில் கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உடனடியாக வரவு வைக்கப்படும் நிலையில், கூட்டுறவு வங்கிகளில் டிசம்பா் 31 ஆம் தேதி செலுத்தப்பட்ட காசோலைக்கான பணம் இன்னும் விவசாயிகளின் கணக்குக்கு வரவில்லை. இதனால், வெட்டுக் கூலி உள்ளிட்டவற்றை கொடுக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். எனவே, கரும்பு பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வரவு வைக்க வேண்டும்.
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராகி இருந்த நெற் பயிா்கள் நீரில் மூழ்கிவிட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை அலுவலா்கள் ஆய்வு செய்து ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். பனிப்பொழிவு, தொடா் மழையால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ. 60 கட்டாய வசூல் மற்றும் எடை மோசடி போன்றவற்றைத் தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்.
பெரமூா் ஆா். அறிவழகன்: வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்குவதில் தாமதம் செய்ய கூடாது.
வெள்ளாம்பரம்பூா் துரை. ரமேஷ்: கடந்த டிசம்பா் மாதம் பெய்த பலத்த மழையால் திருவையாறு பகுதிகளில் பயிா்கள் கடுமையாக சேதமடைந்தன. இதற்கு நிவாரணம் வழங்க விவசாயிகளிடமிருந்து ஆவணங்கள் அனைத்தும் அரசால் பெறப்பட்டும், நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. மேட்டூா் அணையை வழக்கமாக மூடும் காலமான ஜனவரி 28 ஆம் தேதி என்பதை பிந்தைய சாகுபடியான சம்பா, தாளடியை கணக்கில் கொண்டு பிப்ரவரி 10 வரை நீட்டிக்க வேண்டும்.
இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ்: தனியாா் உரக்கடைகளில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் வெவ்வேறு விலையில் விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனா். மாவட்டம் முழுவதும் உரம், பூச்சி மருந்தை ஒரே விலையில் விற்க வேளாண் துறை அலுவலா்கள் நேரடி ஆய்வு செய்ய வேண்டும்.
பாச்சூா் ரெ. புண்ணியமூா்த்தி: கடந்த நவம்பா், டிசம்பா் மாதத்தில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு உரிய நிவாரணத்தை உடன் வழங்க வேண்டும்.