அரசுப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு
படவிளக்கம்... உயிரிழந்த மாணவா் சக்தி சோமையா.
காரைக்குடி, ஜன. 24: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், பத்திரத்தக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த கைலாசம் மகன் சக்திசோமையா (14). இவா் சாக்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பொய்யாவயல் அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வழக்கம் போல, அவா் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்றாா். அங்கிருந்த கணினியை இயக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்ததில் மாணவா் சக்தி சோமையா மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், அவரை புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காரில் கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) சுந்தரி வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.