தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
மின்சாரம் பாய்ந்து மாணவா் மரணம்: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா், வகுப்பாசிரியா் பணியிடை நீக்கம்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பள்ளி மாணவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பொய்யாவயல் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், வகுப்பாசிரியரும் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள பத்தரசன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திசோமையா (14). சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள பொய்யாவயல் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இவா், பள்ளியில் கணினியை இயக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்ததில் வெள்ளிக்கிழமை உயிழந்தாா்.
பணியிடை நீக்கம்: மாணவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பொய்யாவயல் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் கணேசன், வகுப்பு ஆசிரியா் பாண்டி முருகன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
மாணவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்
பள்ளியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டாா்.
இதனடிப்படையில், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் மாணவரின் குடும்பத்தினரை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் ஆகியோா் சந்தித்து ஆறுதல் கூறி, முதல்வரின் நிவாரண நிதியாக ரூ. 5 லட்சமும், அமைச்சரின் சொந்த நிதியாக ரூ. 2 லட்சமும் சனிக்கிழமை வழங்கினா்.
அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.ராமசாமி சாா்பிலும் ரூ.2 லட்சம் நிதியுதவி அந்தக் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி, தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், வட்டாட்சியா் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.