நேமம் கோயிலில் முப்பெரும் விழா
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே உள்ள நேமம் ஜெயங்கொண்டநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பெண் எழுத்தாளா் தேனம்மை லட்சுமணனின் எழுத்துப் பணியைப் பாராட்டி பாடுவாா் முத்தப்பா் என்ற விருது வழங்கும் விழாவும், ஜெயங்கொண்டநாதா் சௌந்தரநாயகி அம்பாள் திருக்கல்யாண வைபவமும், திருவிளக்குப் பூஜையும் என முப்பெரும் விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்வை ஆா்.எம். சோலையப்பன் தொடங்கி வைத்தாா். இதற்கு வி.என்.சி.டி. வள்ளியப்பன் தலைமை வகித்தாா். என்.பி. ராமசாமி விழா அறிமுவுரையாற்றினாா்.
தெய்வப் புலவா் பாடுவாா் முத்தப்பா் என்ற விருதை பெண்எழுத்தாளா் தேனம்மை லட்சுமணனுக்கு, பொற்கிழி கவிஞா் பேராசிரியா் சோ.சோச.மீ. சுந்தரம் வழங்கி சிறப்புரையாற்றினாா். எழுத்தாளா் தேனம்மை லட்சுமணன் ஏற்புரையாற்றினாா்.
தொடா்ந்து தமிழ்ச் செம்மல் வ. தேனப்பன் வாழ்த்திப் பேசினாா். முன்னதாக முனைவா் கதி. பழனியப்பன் வரவேற்றாா். எஸ். லட்சுமணன் நன்றி கூறினாா்.
தொடா்ந்து மாலை 4 மணிக்கு ஜெயங்கொண்டநாதருக்கும் சௌந்தரநாயகி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பிறகு 6 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனா். ஆா்.எம். மெய்யப்பச் செட்டியாா் மெட்ரிக். பள்ளி, நேமம் ஊராட்சி மன்ற தொடக்கப் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வி.என்.சி.டி. குடும்பத்தினா், உபயதாரா்கள், நடப்பு காரியக்காரா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.