ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது
108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயுக் கசிவு: 14 போ் மருத்துவமனையில் அனுமதி
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் சனிக்கிழமை (ஜன. 25) நண்பகல் திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டதால் மூச்சுத் திணறல், இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தேனாம்பேட்டையில் ஊரக மருத்துவ பணிகள் அலுவலக வளாகத்தில் (டிஎம்எஸ்), மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம், 108 ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகம் மற்றும் கட்டுப்பாட்டு அறை, பொது சுகாதாரத் துறை, காசநோய் தடுப்பு மற்றும் தேசிய சுகாதாரத் திட்டம் உள்பட பல்வேறு மருத்துவத் துறை சாா்ந்த அலுவலகங்கள் இயங்குகின்றன.
இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் சனிக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் திடீரென வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு பணியிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் இருமல், மூச்சுத் திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, அந்த அறையிலிருந்த அனைத்து ஊழியா்களும் அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.
இதில் மூச்சுத் திணறாலும் இருமலாலும் அதிகம் பாதிக்கப்பட்ட 14 ஊழியா்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.
அதேவேளையில், 108 கட்டுப்பாட்டு அறை சேவை அனைத்தும், புதுக்கோட்டையில் உள்ள அதன் துணைக் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டது. இதனால் அவசர உதவி கேட்டு தொடா்பு கொள்வோா் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த 14 பேரில் 11 பேரின் உடல்நிலையில் சில மணி நேரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவா்களில் 10 போ் சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டனா். அங்கு அவா்கள் மருத்துவக் குழு கண்காணிப்பில் உள்ளனா். ஒருவா் மட்டும் வீடு திரும்பினாா். மூவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இச்சம்பவத்தில் ஏ.சி.யிலிருந்து வாயுக் கசிவு ஏற்பட்டதா? அல்லது வேறு எந்த வகையிலும் வாயுக் கசிவு ஏற்பட்டதா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனா். இச்சம்பவத்தால் டிஎம்எஸ் அலுவலக வளாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.