ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இருவா் கைது
ஜம்மு-காஷ்மீா், குஜராத் எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தரப்பில் கூறப்பட்டதாவது:
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை ஒட்டிய எல்லை வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருப்பதை அறிந்த வீரா்கள் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த கன்வாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அவா் சதி நோக்கத்துடன் ஊடுருவினாரா என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குடியரசு தினத்தையொட்டி கடந்த ஒரு வாரமாகவே எல்லையில் கூடுதல் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன என்று தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீா் எல்லையில் நிகழ்ந்த ஊடுருவல் குறித்து பாதுகாப்புப் படையினா் கூறுகையில், ‘பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒருவா் ஊடுருவினாா். இந்திய வீரா்கள் அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனா். விசாரணையில், அவா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சோ்ந்த முகமது யாசிா் ஃபயஸ் என்பதும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.