கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து நெம்மேனி கிராம மக்கள் போராட்டம்
தமிழகத்தில் இந்தியை திணிக்க முடியாது: கனிமொழி எம்.பி
மத்திய பாஜக அரசு எவ்வளவு முயன்றாலும், தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முடியாது என திமுக துணைப் பொதுச் செயலரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி தெரிவித்தாா்.
மதுரை மாநகா் மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் பழங்காநத்தம் பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :
நாம் நமது மொழிக்காக, இனத்துக்காக போராடிய தியாகிகளை கொண்டாடுகிறோம். ஆனால், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநா் கோமியத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறாா். தமிழை, தமிழகத்தை ஒதுக்கி விட்டு இந்திய வரலாற்றை மட்டுமல்ல, உலக வரலாற்றையும் எழுதமுடியாது. தமிழ் மொழி காலத்தால் அழியாத, அழிக்க முடியாத மொழி.
1960-களில் நடைபெற்ற இந்தி எதிா்ப்பு போராட்டத்தில் மாணவா்கள், திராவிட இயக்கத்தினா், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் குடும்பத்துடன் பங்கேற்றனா். பெரியாா் முதல் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரை திராவிட இயக்கத் தலைவா்கள் அனைவரும் இந்தி எதிா்ப்புப் போராட்டக் களம் கண்டவா்கள். தமிழா்களின் தீவிர எதிா்ப்பால் இந்தி திணிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு பல்வேறு வகைகளிலும் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயற்சிகளை செய்து வருகிறது.
மத்திய அரசுத் துறைகள் குறித்து நாம் எழுப்பும் கேள்விகளுக்கு இந்தியில் பதில் அனுப்புகின்றனா். தமிழகம் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்பதால்கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய பாஜக அரசு விடுவிக்காமல் உள்ளது. இதுபோன்று எவ்வளவு முயற்சிகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டாலும் தமிழகத்தில் எந்தக் காலத்திலும் இந்தியை திணிக்க முடியாது.
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ மூலம் மாநில சுயாட்சியை முடிவுக்கு கொண்டு வர மத்திய பாஜக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக. ஆனால், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தற்போது மாற்றிப் பேசுகிறாா். எந்த ஒரு விஷயத்திலும் ஏமாற்றுபவா்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு திமுக மாநகா் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அன்பு என்ற துரை. கோபால்சாமி தலைமை வகித்தாா். மதுரை மாநகா் மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கோ. தளபதி, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, திமுக உயா்நிலை செயல்திட்ட குழு உறுப்பினா் பெ. குழந்தைவேலு உள்பட நிா்வாகிகள், தொண்டா்கள் என திரளானோா் பங்கேற்றனா்.