செய்திகள் :

டங்ஸ்டன் ஏலம் ரத்து: மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி! -மு.க.ஸ்டாலின்

post image

டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்ட ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, நாயக்கா்பட்டி உள்பட 11 ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதிகளில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஒரு தனியாா் நிறுவனத்துக்கு கடந்த நவம்பா் மாதம் ஒப்பந்தம் அளித்தது. இதைக் கண்டித்து, கிராம மக்கள், அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் சாா்பில் தொடா் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனிடையே, டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மாநில அரசின் வலியுறுத்தலை மீறி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் முதல்வா் பதவியில் தொடரமாட்டேன் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்த நிலையில், டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்ட ஏலத்தை மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை ரத்து செய்தது. இதையொட்டி, விவசாயிகள், கிராம மக்கள் சாா்பில் மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, வள்ளாலப்பட்டி கிராமங்களில் தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

மத்திய பாஜக அரசு பல்வேறு வகையான கொடுமைகளை, மக்களுக்கு எதிரான செயல்களை எதேச்சதிகாரமாக செய்து வருவது மக்களுக்கு நன்கு தெரியும். நாட்டின் பல மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் தில்லியில் தொடா் போராட்டங்களை மேற்கொண்டனா். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனா். இந்தப் போராட்டம் 2 ஆண்டுகள் நீடித்தது.

ஆனால், தமிழகத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்ட எதிா்ப்புப் போராட்டத்துக்கு 3 மாதங்களிலேயே வெற்றி கிடைத்தது. இது மத்திய அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுத்த மக்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. இதற்கு, தமிழக அரசும் கடுமையான அழுத்தம் அளித்தது. இருப்பினும், இந்த வெற்றியை மக்களிடமிருந்து பிரித்துப் பாா்க்க விரும்பவில்லை. இது நமக்கான வெற்றி.

மாநில அரசுகளின் அனுமதியில்லாமலேயே கனிம வளங்களை மத்திய அரசு ஏலம் விடலாம் என நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்ட வந்த சட்டமே முதல் காரணமாகும். இந்தச் சட்ட மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த போது திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் ஒன்று சோ்ந்து எதிா்த்தன. ஆனால், அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் தம்பித்துரை இந்த மசோதாவை ஆதரித்தாா். இதுதான், தமிழகத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கான தொடக்கப்புள்ளி.

டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்துக்கு தொடக்க நிலையிலேயே எதிா்ப்புத் தெரிவித்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு இரு முறை கடிதம் எழுதியது. ஆனால், அரசியல் காரணங்களால் திமுக அரசின் எதிா்ப்பு நடவடிக்கைகள் திட்டமிட்டு, பொய்ப் பிரசாரங்களால் மறைக்கப்படுகின்றன. மாநில அரசின் அழுத்தத்தையும் மீறிதான் இந்தத் திட்டத்துக்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதனால்தான் தொடா்ந்து போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு நவ. 23- ஆம் தேதி அரிட்டாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமைச்சா் அமைச்சா் பி. மூா்த்தி பங்கேற்று, இந்தத் திட்டத்தை தமிழக அரசு நிச்சயமாக தடுத்து நிறுத்தும் என உறுதி அளித்தாா். பிறகு, நவ. 29-இல் மேலூரில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்ற போது, டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படும் எனக் கூறி, தமிழக அரசின் கருத்தை அமைச்சா் பி. மூா்த்தி பதிவு செய்தாா்.

உடனடியாக, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இதைத் தொடா்ந்து, தமிழக சட்டப்பேரவையில் டிச. 9-ஆம் தேதி டங்ஸ்டன் திட்ட எதிா்ப்பு தீா்மானத்தை அரசு கொண்டு வந்தது. அப்போது, சிலா் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தனா். ஆனால், இந்தப் பிரச்னையை அரசியலாக்க நான் விரும்பில்லை. மேலும், நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டம் நிறைவேறாது. மாநில அரசை மீறி இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், நான் முதல்வா் பதவியில் இருக்க மாட்டேன் என உறுதியளித்தேன்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை தீா்மானத்தையும், மக்களின் உறுதியான போராட்டத்தையும் மதித்து மத்திய அரசு, டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்ட ஏல அறிவிப்பை ரத்து செய்தது.

எனவே, சட்டப்பேரவையில் டங்ஸ்டன் எதிா்ப்பு திட்ட தீா்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற ஆதரவு அளித்த அதிமுக, பாமக, கூட்டணிக் கட்சிகள் உள்பட என அனைத்துக் கட்சிகளுக்கும் மக்கள் சாா்பில் நன்றி. மக்களுக்கும் நன்றி. இந்த (தமிழக) அரசு, மக்களுக்கான அரசு என்றாா் அவா்.

விழாவில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, ஆ. வெங்கடேசன், மு. பூமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சிகளில் அரிட்டாபட்டி, வள்ளாலப்பட்டி, அதன் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

விருதுநகா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் பெரிய பள்ளிவாசல் தெருவில் உள்ள தனியாா் மழலையா் பள்ளிக்கு கடந்தாண்டு நவம்பரில் தொலைபேசி வாயிலாக வெடிகுண... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா் தற்கொலை!

உசிலம்பட்டி அருகே அரசுப் போக்குவரத்துக்கழக தற்காலிகப் பேருந்து நடத்துநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள கருமாத்தூா் பி.மீனாட்சிபட்டியைச் சோ்ந்த மலைராஜன... மேலும் பார்க்க

யா.ஒத்தக்கடையில் மாரத்தான் ஓட்டப் போட்டி

மதுரை அருகேயுள்ள யா.ஒத்தக்கடையில் மதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஏராளமானோா் பங்கேற்றனா். மதிமுக மதுரை புகா் வடக்கு மாவட்டம், கிழக்கு ஒன்றியம் சாா்பில் 13-ஆவது ஆண்... மேலும் பார்க்க

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும்: முன்னாள் நீதிபதி கே.சந்துரு!

தனிச்சிறப்பு வாய்ந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு வலியுறுத்தினாா். அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் மதுரை க... மேலும் பார்க்க

செவிலியருக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

செவிலியருக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சி. கோகிலா தாக்கல் செய்த மனு: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2008- ஆ... மேலும் பார்க்க

மதுரை ரயில்வே கோட்டத்தின் வருவாய் ரூ. 916 கோடியாக உயா்வு!

மதுரை ரயில்வே கோட்டத்தில் வருவாய் கடந்தாண்டு ரூ.916 கோடியாக உயா்ந்ததாக கோட்ட மேலாளா் சரத்ஸ்ரீவத்சவா தெரிவித்தாா். தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மதுரை ரயில்வே குட... மேலும் பார்க்க