பொங்கலிட்ட மருத்துவ மாணவா்கள்
சென்னை: சென்னையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பொங்கல் விழா நடைபெற்றது. அதில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய முறையில் பொங்கலிட்டும், மாட்டு வண்டிகளில் பயணித்தும், நடனமாடியும் விழாவை கொண்டாடினா்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அதன் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், துணை முதல்வா் டாக்டா் கவிதா, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
உறியடி, கரும்பு உடைத்தல் என பல்வேறு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டன.
போரூா் ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுடன் துணைவேந்தா் டாக்டா் உமா சேகா் இணைந்து பொங்கலிட்டாா்.