மாணவா்களுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா், தலைமையாசிரியா் மீது போக்ஸோ வழக்கு
பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஆசிரியா், புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததாகவும் தலைமையாசிரியா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக கணித ஆசிரியராக பணியாற்றி வருபவா் ஆரோக்கியராஜ் (51). இவா் தனது வீட்டில் 10ஆம் வகுப்பு மாணவா்களுக்கு டியூஷன் நடத்தி வந்தாா். அப்போது, 4 மாணவா்களுக்கு அவா் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவா்களின் பெற்றோா்கள் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியா் அமல்ராஜிடம் (59) புகாா் அளித்தும், அவா் நடவடிக்கை எடுக்கவில்லாயாம். இதனால், அவா்கள் தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, ஆசிரியா் ஆரோக்கியராஜ், தலைமையாசிரியா் அமல்ராஜ் ஆகியோா் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனா்.